அன்பில் கோபமானவள் by Musthafa Mohamed Ashraff

வேலை விட்ட கையோடு, களைப்பும் அவசரமும் கலந்த உணர்வோடு தனது இரண்டு வயது மகன் என்ன செய்கிறானோ? என்னும் ஏக்கத்துடனும் மகனை “அஸ்லம்”என்று அழைத்துக் கொண்டு…தனது வீட்டின் கதவை சட்டென்று திறந்தாள் ஷாமிலா
சிறுகதை – 01
“ஆண்டி, நான் சொல்லக் கூடாதின்டுதான் நினச்சன். கொஞ்சம் ஓவராப் போரா. சொன்னாலும் புரிஞ்சிக்கிறாயில்ல. என்ன பண்ரன்டு தெரியிதில்ல. கொஞ்சம் பாத்து நடந்துக்க சொல்லுங்க.”என்று சொல்லி விட்டு, அவளைக் கண்டதும் தனது கைபேசியை நிறுத்தி கொண்டு…வேகமாக வெளியேறினான் றுமைஷ்.

வாப்பா செல்வதைப் பார்த்தவாறு, அழுது கொண்டே வந்த மகனை அனைத்துக் கொண்டாள் ஷாமிலா.

“என்ன மகன் தங்கம்…வாப்பா கூட்டிப் போகல்லியா உங்கள? வாப்பா போய்ட்டு வந்து, கூட்டிப் போய் சொக்கா வாங்கித்தரும்”என்று ஆறுதல் வார்த்தை கூறியவாறு, தனது மகனை சமாளித்துக் கொண்டு படுக்கையறையை நோக்கி நகர்ந்தாள்.

ஒருவாராக, மகளின் அழுகையை அலுவலகப் பைக்குள் இருந்த சொக்லெட்டின் துணையுடன் நிறுத்தினாள். அவன் விளையாட ~டீவி கேமை| இயக்கிக் கொடுத்து விட்டு, தனது வழமையான வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள் ஷாமிலா.

வீட்டு வேலைகளுடனேயே நேரம் போனதும் தெரியாத அவளுக்கு ‘இன்னும் அவரு டீ குடிக்க வரலியே| என்று எண்ணத் தோன்றியதுமே…றுமைஷ் கோபமாகப் போனது ஞாபகத்துக்கு வந்தது.

இதற்கு முதலும் இவ்வாரு நடந்திருப்பதனால் பெரிதாக பொருட்படுத்தாது, தனது வேலையைத் தொடர நினைத்தாலும் பக்கத்து மேசையில் கிடந்த கைபேசியை எடுத்து அவனுக்கு அழைப்பை எடுத்தாள். பதில் இல்லை. மீண்டும் எடுத்தாள். பதில் இல்லை.. மீண்டும்; எடுத்தாள் பதிலே இல்லை…

றுமைஷ் என்னதான் வேலையாக இருந்தாலும் அவளும் மகனும் வீட்டில் தனியாக இருப்பதனால் அவளிடமிருந்து அழைப்பு வந்தாள் எடுக்கத் தவறுவதில்லை. ‘அவர் பைக்ல வாராரோ தெரியல்ல| என்று முணுமுணுத்துக் கொண்டு “அஸ்லம் விளையாடின போதும் ஓடி வாங்க. மேல் களுவிட்டு வாப்பா வந்தோன வெளியில போலாம்”என்று சொல்லிக் கொண்ட மகனிருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.

இருட்டிய அறைக்குள் தனது விளையாட்டில் லைத்துப் போயிருந்த மகனை இழுத்துக் கொண்டு குளியலறையை நோக்கிச் செல்லும் போது, மெல்லிய இருட்டில் மேசையின் மேலிருந்த அவளின் கைபேசி ஒலிராது மின்னியது கண்டு… ‘யாரோ அழைக்கின்றார். அது அவராகதான் இருக்கும்| என்று எண்ணிக் கொண்டு, கைபேசியை ஓடிப்போய் எடுத்துப் பாத்தாள்.

அவள் எதிர் பார்த்தவர் அழைத்திருக்கவில்லை. அது அலுவலகத் தோழியின் அழைப்பு. பிறகு பேசிக் கொள்ள எண்ணி நிறுத்தி விட்டு, கைபேசியை மேசையில் போட…றுமைசும் வீட்டுக் கதவைத் திறந்து வர இருவர் உள்ளத்திலும் இருவேறு சங்கடங்கள் உருவெடுத்தன.

‘இவளுக்கு இதுதான் வேலை| என்று அவனும் ‘எத்தின தடவ போன் எடுத்தும் தூக்கல்ல என| என்று அவளும் எண்ணிக் கொள்ள, கண்கள் நிலத்தை நோக்க…உதடுகள் மௌனம் சுமக்க…எண்ணம் மட்டும் அதிலேயே நிலைத்திருக்க…இடத்தை மாற்றினர் இருவரும்.

கொஞ்ச நேரம் கழியும் வரை வெளியறையிலேயே நின்று விட்டு உள்ளே வந்த ஷாமிலா “டீ தரட்டுமா? நேரம் போனது கூட தெரியல்ல போல சேருக்கு கோல் எடுத்தாலும் நோ ஆன்சர்”என்றாள் வெறுப்புக்கலந்த வார்த்தையில்.

வேறு வேலையிருந்தும் மனைவி கைபேசியில் அழைப்பது தெரிந்து உடனே வீடு திரும்பியிருந்தாலும் ஏதோவொரு கோபத்தில் இன்னும் மூழ்கியிருப்பது தெரிவது போன்று “தேவல்ல”என்றான் இருக்கமான குரலில்.

அவள் எதிர்பார்த்த பதில் தான். என்றாலும் அவள் உள்ளம் மேலும் சோகமேற்கத் தொடங்கியது. அப்போதுதான் மகனின் ஞாபகம் வந்ததவளுக்கு.

இதனிடையே கைபேசியும் வெளிச்சம் போடத் தொடங்கிற்று. பதிலில்லாததால் தோழி மீண்டும் அழைக்கிறாள்.

திருமணமாகி முன்;றாண்டுக்குள், இந்த வீடு ஒரு நாளும் இவ்வாறு இருந்ததில்லை. அதுவும் இன்று வெள்ளிக்கிழமை வேறு. ஊரெல்லாம் சுற்றி ஒன்பது மணிக்கு பிறகு வருவதுதான் வழமை.

ஆனாலும் இன்று அவ்வாறில்லை. இன்றுள்ள புகையிரதப் பயணிகள் போல, அவன் கைபேசியில் ஏதோவொன்றை வெகு நேரமாய்ப் பார்த்துக் கொண்டிருக்க மறுபுறத்தில் மகனின் தலையைத் தடவிக் கொண்டு தனித்தவளைப் போலிருந்தாள்.

திடீரென ஏற்பட்ட மின் வெட்டு இருவரின் சிந்தனையையும் மாற்ற, றுமைஷ் நேரத்தை பார்த்து விட்டு படுக்கையறைக்குள் செல்ல, மடியிலிருந்த மகனை இறக்கி விட்டு சமையலறைக்குள் சென்றாளவள்.

சமைத்த உணவு மேசையில் காத்திருக்க, இன்றைய இரவு கண்ணீரிலும் கவலைகளுடனும் கழியத் தொடங்கியது.

மீண்டும் அவளது கைபேசியிலிருந்து ‘பளீச் பளீச்| என்று வெளிச்சம் வரத் தொடங்கியது.
அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையிலில்லையவள். ‘அவனோடு கதைப்பதா? இல்லை இதே இடத்தில் தூங்கிவிடுவதா| என்னும் எண்ணமவளுக்கு.

இதனிடையே, படுக்கையறையிலிருந்து வந்த றுமைஸ் “எனக்கு பசிக்கல்ல. நீங்க சாப்பிடிட்டு தூங்குங்க மெடம்”அடி முரட்டுக்குள் தண்ணீர் பொறுத்தது போன்று கூறிவிட்டு மீண்டும் படுக்கையறைக்குள் நுழைந்தான்.

அப்போதும் அவளது கைபேசியிலிருந்து வெளிச்சம் வியாபித்தது. அவனது கண்களையும் ஈர்த்தது.

மகன் அஸ்லமும் தூங்கத் தொடங்கியதனால் சாப்பாட்டை வேண்டாம் என்றான். கோபத்தில் அவனுக்கும் ஒரு அடி போட்டு விட்டு “நீயும் அவரபோலதான் இருக்கா”என்று மகனை இழுத்து தனது மடியில் தூங்க வைத்தாள்.

இயல்பாகவே அஸ்லம் வாப்பாவைப் போலத் தான். ‘இவன் உங்கள போலான். பெரிய மூக்கும் உருண்டக் கண்ணும் கறுப்பு முடியும். குணத்திலயும் தான். டக்கின்டு கோபம் வந்திடும்| என்று இவளே ஒரு முறை சொன்னது ஞாபகத்துக்கு வர, மகனை அணைத்து முத்தமிட்டுக் கொண்டு சுவரில் சாய்ந்தாள்.

ஷாமிலாவுக்கு கலைப்பும் சோர்வும் தூக்கத்தை கொண்டு வந்தாலும் ‘அவர் சாப்பிடாம தூங்கிறாரே| என்னும் எண்ணமும் இவரின் கோபத்திற்கு காரணம் எதுவாயிருக்கும் என்னும் கேள்வியும் அந்த தூக்கத்தைக் குழப்பிக் கொண்டேயிருந்தது.

தனது கைபேசியிலிருந்த அவளினதும் மகனினதும் புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்து கலைத்துப் போய் பணிக்கட்டிக்குள் உறைந்து கிடக்கும் புரைலர் கோழி போல விறைத்துக் கிடந்தாள். தூங்கியும் ஏங்கியும் பெருமளவு தூக்கத்தை தொலைத்திருந்த ஷாமிலாவுக்கு பொழுது விடிந்திருக்கும் என்று உணர முடிந்தது. காகத்தின் ‘கா கா| ஓசை அதனை உணர்த்தியிருக்குமவளுக்கு.

இது மழை காலம் என்பதனால், வீட்டுக்கு முன்னாலுள்ள பாதையில் தண்ணீர் நிறைந்திருந்தது. முச்சக்கர வண்டியொன்று தண்ணீரைக் கடந்து வந்து கதவின் அருகே நிற்பது போன்று அவளுக்கு தோன்றியது. என்றாலும் பொருட்படுத்தாதிருந்தாள்.

ஆனால்…‘டக் டக்| என்று கதவைத் தட்டி “~ஷாமிலா ஷாமிலா”என அழைக்கும் குரல் கேட்டு விழித்தெழுந்து கதவோரமாய்ப் போய் நிற்க, மீண்டும் சத்தம் கேட்டது.

கதவைத் திறப்பதற்கு முன்னரே, அது தனது தாய்தான் என்று உணர்ந்து வியப்புடனும் பயத்துடனும் கதவைத் திறந்தாள்.

“வாங்கம்மா. என்ன திடீர்ன்டு”என உறங்கிய முகத்துடன் உள்ளேயழைத்தாள்.

நிலைமை தாய்க்கு தெரிந்திருந்தும் தெரியாதவளாக “வரனும்டு நினச்சன் வந்திடன்” சொல்லி முடிப்பதற்குள் பேரனை தூக்கியணைத்துக் கொண்டு… சாப்பிடப்படாத இரவுணவு, பேரன் தூங்கிய இடம், மகளின் வாடிய முகம் என்பவற்றை வைத்து வீட்டுச் சூழல் சிக்கலாக இருப்பதை உணர்ந்து கொண்டாள் தாய்.

தனக்கும் கணவனுக்குமிடையிலான கோப தாபங்களை காட்டிக் கொள்ளாது, வழமையான வீட்டு வேலைகளை தொடங்கினாள் ஷாமிலா.

தனது மாமியார் வந்திருப்பது தெரிந்தும் முகம் கொடுக்காது அலுவலகத்துச் செல்ல தயாராகி விட்டு, படுக்கையறையிலிருந்து வெளியே வர – ஷாமிலாவும் அலுவலகத்துக்கு வரமுடியாது என்பதனை சொல்லிவிட்டு திரும்ப கைபேசியும் கையுமாகவிருந்த அவளைப் பார்த்து விட்டு “நான் இல்லாட்டியும் இந்த போன் இருந்தா போதும்”என்று சிவந்த, சினந்த முகத்துடன் கூறிக் கொண்டு மகனைக் கூட அணைத்து முத்தமிடாது வேகமாக வெளியேறினான்.

நடு நெற்றியில் சுடு நீரை ஊற்றியது போல அவனது வார்த்தைகள் அவளின் காயப்பட்டிருந்த இதயத்தை மேலும் ரணப்படுத்தி வறுத்தியது. என்றாலும் கணவனின் கோபத்திற்கும் தாயின் வருகைக்கும் காரணமென்ன என்பதை உணரத் தொடங்கினாளவள்.

அமைதியாயிருந்த தாய், யதார்த்த நிலையை சாமர்த்தியமாகச் சொல்லி புரிய வைக்க வேண்டும் என்று எண்ணி…
“நமக்கு பிடிச்சவங்களுக்கு நாம செய்றது பிடிக்கல்லன்டா அத விடுறதுதான் நல்லது.”என்று பொதுவாகச் சொன்னாள்.

“நான் என்னம்மா தப்பா செய்தன். யாருமே என்ன புரிஞ்சிக்கிறிங்கல்ல”என்று அழுது கொண்டே படுக்கையறைக்குள் ஓடினாள் ஷாமிலா.

இதன் போதும் அவளது கைபேசியின் வெளிச்சம் விட்டு விட்டு ஒளிரத் தொடங்கியது.
சற்று நேரம் கழிய…படுக்கையறையை நோக்கி நகர்ந்தாள் தாய்.

குதிகால் சுருட்டி, குப்புறப் படுத்திருந்த மகளின் அருகிலிருந்து கொண்டு, அவளது தலையைத் தடவியவாறு“ஷாமிலா நீ நல்ல புள்ள. சந்தர்ப்பம் நம்மல கெட்டாக்களா காட்டிடும். அதால நாமதான் கவனமாக நடந்துக்கனும்”என்றாள்.

ஷாமிலா, தாயின் முகம் பார்க்காது அவளின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கத் தொடங்கினாள்.

தலையணையின் மேலுறை அவளின் சிவந்த கண்ணத்திலிருந்து வடிந்த நீரைச் சுவைக்கின்றது என்பதனையறிந்தும் பேச்சைத் தொடர்ந்தாள் தாய்.

“அவரும் உங்கிட்ட சொல்லியிருக்காராம். ஒப்பிஸ் ஆள் ஒருத்தரும் அவருக்கிட்ட சொன்னதாம். உன்ன அவரு சந்தேகப்படல்ல. மத்தாக்கள் தரக்குரவா பேசிரத கேட்டா யாருக்குதான் கோபம் வராது…”என்று நிலைமையை எடுத்துச் சொல்லி, அவளுக்கு புரிய வைப்பதில் வெற்றி கண்டாளவள்.

ஒரு கட்டத்தில், எல்லாத் தவறும் தன் பக்கமே என்பதனை உணரத் தொடங்கினாள் ஷாமிலா.
இறுதியாக தாய் சொன்ன வார்த்தை அவளது கவனத்தை முழுமையாக மாற்றி விட்டது.

“அவரு உன்னையும் உன்ட குடும்பத்தையும் நல்லா விளங்கி வெச்சதாளதான் கோபக்கார வாப்பாகிட்ட சொல்லாம, எங்கிட்ட சொல்லியிருக்காரு”என்று சொல்லி விட்டு,“அவரும் உங்க வாப்பா போல கோபக்காரர்தான். கோபத்த விட இரக்கம் கூடரிக்கிறத்த நீ புரிஞ்சிக்கனும்”என்று சிரித்தாள்.

குற்ற உணர்வு மேலோங்க, தாயின் முழங்காலை பிடித்து அணைத்துக் கொண்டு எதுவும் பேசாதிருந்தாள்.
பின்னர், அவரோடு பேசும் ஆசையில் கைபேசியை எடுத்து அழைத்தாள். அது பக்கத்திலிருந்து ஒலித்ததைப் பார்த்து அவரு போன வச்சிட்டு போயிட்டாறு போல என்றெண்ணிவிட்டு, அவரைக் காணும் ஆசையுடன் காத்திருந்தாள்.

வேலை விட்டு வழமை போலவே வந்தான். மகனை அணைத்து முத்தமிட்டு விட்டு, தனது வழமையான வேலைகளைச் செய்ய தொடங்கினான்.

ஷாமிலாவையும் வீட்டுச் சுழலையும் பார்;க்க மாமியார் எல்லாம் பேசி புரிய வைத்திருப்பார் என்று எண்ணத்தோன்றியது.

சற்று நேரம் கழிய “டீ இருக்கு குடிங்க”என்று டீயை நீட்டினாள்.

இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு இருவரும் தூங்கச் சென்றனர். மகன் உம்மம்மாவுடன் தூங்கி விட்டான்.

படுக்கையறையில் ஷாமிலா தவறுக்கு மன்னிப்புக் கோர, அவனும் மௌனத்தாள் மன்னிப்புக் கொடுக்க…

மீண்டும் அருகிலிருந்து கண் சிமிட்டியது அவளின் கைபேசி.

“அல்லாஹ்வே…வாப்பா எடுக்காரு. உம்மாவோட பேச”என்று சொல்லிக் கொண்டே தாய் தூங்கிய அறையை நோக்கி வேகமாக நடந்தாள் ஷாமிலா.

றுமைசின் விறைத்த முகம் சிரிப்பால் விரிய, ஊடலுக்கு பின்னரான காதலில் இரு உள்ளமும் திளைக்க, இரவும் இனிதாய் கழிந்தது.

– முற்றும் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s