இவனா இப்படி…? by Abirami Yuwarajan

“ஆறாவது கேள்வியை எழுதிக்கொள்ளுங்கள்”என்று ரீச்சர் குமுதா கேள்வியைச் சொல்லத் தொடங்கும் போது வகுப்பின் மூலையிலிருந்து தொடர்ச்சியாக முணுமுணுப்புக்கள் வந்தன. ரீச்சரும் ஏனைய மாணவர்களும் மூலையை நோக்கி தங்களது பார்வையைச் செலுத்தினார்கள். ரீச்சர் குமுதா முணுமுணுப்பு வந்த இடத்தை நோக்கிச் சென்று பார்க்க, திடீரென ராஜா எழும்பி “ரீச்;சர் ரீச்சர் மூன்று கேள்விகளுக்குத்தான் பதில் எழுத முடிந்தது. ஆனால்…. நாலாவது கேள்வி சற்று கடினம் தானே ரீச்சர்” என்றவுடன் ரீச்சர் குமுதாவிற்கு ஒரே ஆச்சரியம்.

“வகுப்பில் முதல்நிலை பெறும் மாணவன் இன்னும் கேள்வியே எழுதவில்லை. ராஜா… இவனா இப்படி?”என்று மனதில் நினைத்தவளாய் அதிசயத்திலிருந்து மீளமுடியாதவளாய் சிறிது கலக்கமுற்றாள். கண்ணிலிருந்து இருதுளிகள் கன்னத்தை முத்தமிட்டன. ரீச்சர் குமுதாவிற்கு மட்டுமல்ல. எல்லா மாணவர்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சி. அவனைப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக்கினார் ரீச்சர்.

“காட்சிகள் கடந்த காலத்தை நோக்கி பயணிக்கின்றன”

விழிகள் வியந்து பார்க்கும் தோற்றம், பனைமர உயரம், நவரசம் காட்டும் வதனம் நெற்றியில்; சுற்றியுள்ள முடிகள், சிவந்த கண்கள், குரல் பருவமடைய ஆயத்தமாகின்றது, மொத்தத்தில் பிரம்மனின் படைப்பில் முதலிடம்.

இப்படியானவனே நமது கதாநாயகன் ராஜா.

சிறுவயதில் ராஜாவிற்கு பெயருக்கேற்ற வாழ்க்கை எட்டாக்கனிதான். கூலி வேலை செய்யும் கந்தசாமிதான் ராஜாவின் தந்தை. தாய் ராணி. வீட்டு வேலைகளைச் செம்மையாய் செய்பவள். குடும்ப வருமானம் என்னவோ அதற்கேற்றவாறே சாப்பாடு மற்றும் உடுப்பு எல்லாம். பெரும்பாலும் காலையில் கருவாட்டுக் கறியும் சுடுசோறும், மிஞ்சினால் மதியம். இரவில் விரதம். வறுமையை வாழ்வாகவும் கஷ்டத்தை விளைவாகவும் கொண்ட வாழ்க்கையை எட்டு வருசமாக பழக்கப்படுத்தியதால் குடிப்பதற்குக் களைப்பை காரணமாக்கிய கந்தசாமியுடனும் ராணி இன்னும் எத்தனை நாள் பொறுப்பாள்? அன்று ஏதோ ஒரு கதையில் ராணி கந்தசாமியுடன் வாய்கொடுத்தாள். அன்றிலிருந்து வீட்டில் குழப்பந்தான்.
ஒரு நாள் வெள்ளிக்கிழமை பக்கத்து வீட்டு பத்மா அக்கா ஓடிவந்து ராணியிடம் அர்ச்சனையைப் போட்டாள்.

இப்படி குமுதா ஆசிரியை மாணவர்களிடம் சொல்லத் தொடங்கும் போது ராஜா எழும்பி “ரீச்சர் நாலாவது கேள்விக்கு இதுதானா விடை?”என்று கேட்டான். “விடை மிகவும் சரியானது”என ரீச்சர் சொன்னவுடன் ராஜாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே. அடேயப்பா சொல்லவே முடியாது.

ரீச்சர் மறுபடியும் அவனது கதையைச் சொல்லத் தொடங்கியதும் ராஜாவின் எண்ண அலைகளும் தன் குடும்பத்தை நோக்கி சுழலத்தொடங்கியது.
பத்மா அக்காவின் கதைகளைக் கேட்ட ராஜாவின் தாய் வெளிநாடு செய்யச் சம்மதித்தாள். ஆரம்பத்தில் சற்று தயக்கம் காட்டினாலும் பிள்ளைகளை நினைத்துப் பார்த்து தஞ்சாவூர் பொம்மையானாள்.

அந்தமாத இறுதியில் ராணி சவுதி நோக்கிப் பறக்கின்றாள். ராஜா மூன்று வயதிலே தெராசா இல்லத்தில் சேர்க்கப்பட்டான். அவனுக்கும் சரி, வீட்டிற்கும் சரி மாதா மாதம் பணம் மட்டும் வந்து சேரும். ஆனால் அவன் அதை எதிர்பாக்கவில்லை. எதிர்பார்ப்புகள் ஏக்கங்கள், அழுகை என்பன நித்தம் ராஜாவைத் தொடர்கின்றன. ராஜாவிற்கு யாரைக் கண்டாலும் வெறுப்பு. அளவிலடங்காத குறும்பு. இதனால் குழப்படிக்காரனென்று பெயர் எடுக்கும் அளவிற்கு வளர்ந்தான். காப்பகங்களிலும் இவனால் பல பிரச்சினைகள். இவனுக்கு மட்டும் இடமாற்றம். விண்ணப்பம் அளிக்காமலே தொடர்ச்சியாக காப்பகங்கள் மாறி மாறி இறுதியாக ஹரி இல்லத்தில் சேர்க்கப்பட்டான்.

ராஜாவின் அபரிதமான குழப்படிகளைப் பல தடவைகள் கண்டித்தும் அவனது சேட்டைகளுக்கு முடிவில்லை. இதனால் காலம் செல்லச் செல்ல ஆசிரியர்களும் அதிபரும் கவனிக்காமல் விட்டுவிட்டனர். காரணத்தைக் கண்டறிய முடியாமல் உடல்ரீதியான தண்டனைகளைக் கொடுத்தனர்.

ராஜாவிற்கோ தாய்மீது இருந்த வெறுப்பு குறைந்ததாய் இல்லை. ஹரி இல்லத்திலும் இவனுக்கென்றே தனியான ஒரு அறை. அதன் சுவர்களில் உள்ள கிறுக்கல்கள் ராஜாவின் கதை சொல்லும். அது வெறும் கிறுக்கல் அல்ல. அவனது எதிர்பார்ப்பு – ஏக்கம்.

(அன்று, ஒரு ஞாயிற்றுக்கிழமை)

ராஜாவைப் பார்க்க தந்தை கந்தசாமி அரிசிமா முறுக்கு, ஒரு சீப்பு வாழைப்பழம், சொக்லட் பிஸ்கட் என ஒரு கூடை நிறையப் பொருட்களுடன் ஹரி இல்லத்திற்குச் செல்ல அங்கிருந்த பிள்ளைகள் எல்லாம் “இவர்தானாம் ராஜாவின் அப்பாவாம்”என்று முணுமுணுத்தனர். இல்லம் முழுவதும் இதுதான் கதை.

ராஜாவின் அறையினுள் சென்ற கந்தசாமி சற்றுத் தடுமாறினார். சுவர்கள் சொல்லும் கதையைக் கேட்டுவிட்ட பின்பு, தான் சொல்;ல வந்த விடயத்தைச் சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டே இருந்தார். தயக்கத்தோடு சொன்னார். ராஜாவிடம் தாய் ராணியின் வரவையும் அவள் வேறோருவருடன் கொண்ட தொடர்பையும் சொல்லச் சொல்ல ராணியின் மீது ராஜாவின் வெறுப்பு நிரந்தரமானது.

ஆசிரியர் ராஜாவின் கதையைத் தொடர்ந்த போது…

ராஜா முந்திக்கொண்டு தன் வாழ்க்கையைத் தானே சொல்லிக் கொண்டான்.

பாடசாலை இறுதி தவணை ஆரம்பத்தின் போது அந்தப் பள்ளிக்குப் புதிய ஆசிரியர் வந்தார். அவர்தான் ரீச்சர் குமுதா. அவரின் வரவில் ராஜா மட்டுமே மகிழ்ச்சியடைந்தான். எனது முன்னேற்றத்திற்குக் காரணம் இந்த ரீச்சர்தான். என்னைப் புரிந்துகொண்டவர். அதாவது மாணவர்களைப் புரிந்துகொண்டவர். என்னை ஒதுக்கியவர் பலர். ஆனால் என்னைச் செதுக்கியவர் இவர் என்று தொடர்ந்தான்.

ரீச்சருக்கு மீண்டும் அதிசயம். இவனா இப்படி?

சரி சரி ராஜா. என்னைப் புகழ்ந்தது போதும் என்று ராஜாவின் வசனத்துக்குத் தடை போட்டாலும் அவனின் இந்த வசனங்களுக்கு வாய்யக்கால் வெட்டியதும் இந்த ரீச்சர்தான். மணி அடித்து அடுத்த பாடம் தொடங்கியது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s