சேவைகள் மிதிபடுகையில்…… by Jahitha Jalaldeen

அது ஒரு அமைதியான காலைப் பொழுது. அரச அலுவலகம் ஒன்றில் எழுதுனராக வேலை செய்பவள் சல்மா. அரச ஊழியர்களுக்கு அவர்களின் இடமாற்றத்தின் போது இருக்கின்ற எதிர்பார்ப்பு என்றால் சந்தோசமான பிரியாவிடை வைபவம்தான். ஆனாலும் தனது பழைய அலுவலகத்திலிருந்து வந்திருந்த பிரியாவிடை அழைப்பிதழை கையில் எடுத்த சல்மா தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலி லிருந்து மீளுவதற்காக அன்றைய நாள் தந்தி மூலம் விடுமுறையை அறிவித்துவிட்டு வீட்டிலேயே இருந்தாள். ஆனாலும் அவளது நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன….
“என்ன சல்மா! இன்டைக்கு வெள்ளிக்கிழமை, வழக்கம்போல கனக்கப்பேர் ஒஃபீசுக்கு லீவு போட்டுட்டு நிண்டுட்டாங்க. நானும் நீங்களும்தான் ஒழுங்கா வேலைக்கு வாறது. நமக்கெண்டா எல்லா நாளும் ஒண்டுதான்” என்றாள் பக்கத்து சீற் சபீக்கா மிஸ்.
“ம்….யார் வந்தாலும் வராட்டிலும் எனக்கு மட்டும் வேலை இருக்கும். அப்பிடியொரு டியூட்டி”
“சரியாச் சொன்னீங்க சல்மா. நீங்க தேவையில்லாம லீவு எடுக்கறதில்ல. அதோட நேர்மையாகவும் நீற்றாகவும் செய்யறதாலதான் உங்களுக்கு இந்த சப்ஜக்டைத் தந்தாங்க. இதுக்கு முன்ன இருந்த கிளாக்மார் நல்ல விளையாட்டுத்தான்”
“நாம என்னதான் நேர்மையா இங்க தொழில் செஞ்சாலும் கடைசியில கெட்டபேர்தான். நாம வாங்கிவந்த வரம் அப்பிடி” விரக்தியுடன் கூறினாள் சல்மா.
இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் நேரம் பத்தைத் தாண்டிவிட்டது. அப்போதுதான் சல்மா அன்று வராதவர்களின் பெயரை அட்டன்டன்ஸ் ரிஜிஸ்டரில் எழுதி முடித்தாள். அந்த நேரம்பாத்து எப்பவும் போல லேட்டா வந்த எக்கவுண்டன்ட் அல்பேட் ஒப்பமிடுவதற்காக றிஜிஸ்டரைப் பார்த்தார். அவருக்குக் கோபம் பொங்கி வந்தது.
“ஏய்! உன்னை யார் எனக்கு அப்சன்ற் எழுதச் சொன்னது? எனக்கு கோடு விடணும் எண்டு தெரியாதா உனக்கு?” என்று சத்தமிட்டார்; அதிகாரத் தொனியில் ஏதோ சொல்ல வாய் உன்னியது. ஆனாலும் சல்மா மௌனமாக இருந்தாள். பொறுமையை இழந்த அல்பேட் றிஜிஸ்டரை வீசி எறிந்துவிட்டு ஒப்பமிடாமலே வெளியேறிச் சென்றுவிட்டார். சக அலுவலர்கள் திகைத்துப்போய் இதனை பார்த்து நிற்க, சல்மாவோ அவமானத்தால் குறுகி நின்றாள்.
“இஞ்ச ஒரு டீசன்ட் இல்ல. யார் வேணுமெண்டாலும் யாரையும் ஏசலாம். நாம வாயையும் காதையும் பொத்திக்கிட்டு வேலை செய்யணும். இதுவே பழக்கமாப் போச்சு” என்று சல்மாவிற்கு மட்டும் கேட்கும் வண்ணம் கூறி, பெருமூச்சொன்றை விட்டாள் சபீக்கா மிஸ்.
“நேரத்துக்கு ஒபீசிற்கு வரணும் எண்டு தெரியாதா என்ன? இவர்;ர இந்தப் போக்காலதான் பணிஸ்மன்ட்ல இங்க அனுப்பினாங்க. ஆனா ஆள் மாறினதாகத் தெரியல” என்றாள் சல்மா.
“இத நீங்க சும்மா விடாதீங்க. நீங்க டீ. எஸ்ஸிடம் போய் சொல்லுங்க. அவரு என்ன நடவடிக்கை எடுக்காரெண்டு பாப்பம்”
சபீக்கா மி;ஸ் சொன்னது சரியெனப்படவே அவரது அறையை நோக்கிச் சென்றாள் சல்மா. அறையினுள் நுழைந்தவள்
“எக்ஸ்கியூஸ்மி சேர்” என்றாள்
குனிந்த தலை நிமிராது எதையோ வாசித்தவாறு இவள் வந்ததையும் பொருட்படுத்தாமல் இருந்தவரை நோக்கி
“என்னை அவமதிக்கும் வகையில் எல்லோர் மத்தியிலும் வைத்து எக்கவுண்டன்ட் ஏசிப்போட்டார்” என்று தணிந்த குரலில் சொன்னாள் சல்மா.
“ஏன்? என்ன பிரச்சனை?”
“சேர் அவர் வந்ததும் வராததுமாய் என்மீது பாய்ந்து விழுந்தார். தன்ர வேலைக்காரிக்கிட்டப் பேசறாப்போல பேசினார்.” என்றாள் சல்மா.
“ஏன் அப்பிடிப் பேசினார்;?”
“அவர் இப்பதான் பத்து மணிக்கு பிறகு லேட்டா ஒபீசிக்கு வந்தார். நான் அவருக்கு அப்சனற்; எழுதிப்போட்டன். அவருக்கு கோடு விடலயாம் என்று கத்தினார்” என்றாள் அவள்.
“ம்.. அதெப்படிச் செய்யறது? இது அழகாகத்தானா இருக்கு? இவரப்போல ஆக்களாலதான் புதுசா வந்த பட்டதாரிமாரையும் திருத்த ஏலாமக் கிடக்கு” என்றார் அவர்.
“சேர் வேலை செய்யிற இடத்துல பொம்பளங்கள கண்டமாதிரி பேசி அவமானப் படுத்தினா எப்படி சேர் வேலை செய்ய முடியும்? எங்களுக்கும் சுயமரியாதை இருக்கு சேர்” என்றாள் சல்மா.
“சரி சரி. விட்டுப்போட்டு அலுவலப் பாருங்க. இதற்காக நான் என்ன அவரோட சண்டையா பிடிக்கேலும்?” என்று அவர் அலட்சியமாகக் கூறுவதைக் கேட்ட சல்மா ஏமாற்றமடைந்தாள்.
“யா அல்லாஹ்! பொம்பள எங்கிறதால இப்படிக் கேவலப்படுத்துறாங்க. இதே ஒரு ஆம்பளயா இருந்தா கைகலப்புலதான் முடிஞ்சிருக்கும். நியாயமும் புறந்திருக்கும்” என்று தன் மனதிற்குள் நினைத்தவாறு தனது கதிரையை நோக்கிச் சென்றாள் அவள்.
சல்மா சோர்வுடன் வந்து “சே” என்று தன் கையிலிருந்த பேனாவை வீசியெறிந்த வண்ணம் தன் கதிரையிலே அமர்வதைக் கண்ட சபீக்கா மிஸ் “ஏன் சல்மா டள்ளா இருக்கிறீங்க? இங்க நடக்கிறதப் பத்தி நினைச்சா மனசுக்கு கஸ்டமாத்தான் இருக்கும். அல்லாட தலையில பாரத்தப் போட்டுட்டு அலுவலப் பாருங்க. இங்க இதெல்லாம் சகஜமாப் போச்சு” என்று சமாதானம் கூறினாள்.
“ஏன் மிஸ் அப்பிடிச் சொல்றீங்க? பொம்பளங்க எண்டா நாம என்ன அடிமைகளா என்ன? நமக்கும் சுயமரியாதை, கௌரவம் எல்லாம் இருக்குத்தானே?”
“அது சரிதான். ஆனா இப்ப பொம்பளங்க அதிகமா வேலைக்கு வாறதால பெரிய இடத்துல இருக்கற சில ஆம்பிளங்க நம்மள மதிக்கிறல்ல. இவக என்ன செஞ்சாலும் யாரிட்டயும் சொல்லமாட்டம். நமக்கு மான மருவாதிக்குப் பயம்தானே!” என்று பெண்களின் இயலாமை பற்றி பேசினாள் சபீக்கா மிஸ்.
“நேர்மையாகவும் ஓழங்காகவும் வேலை செய்யற நம்மள மதிக்காட்டிலும் பரவாயில்ல. மிதிக்காமலாவது இருக்கலாம்தானே” என ஆதங்கத்தோடு சல்மா கூறினாள்.
“இதெல்லாம் நமக்கு நல்ல அனுபவம். இதுக்கெல்லாம் நியாயம் கேட்டா இன்னும் நம்மள கேவலப்படுத்துவாங்களே தவிர நீதி கிடைக்காது. ஏன் எண்டா எல்லாரும் பெரியாக்களுக்குத்தான் சப்போட் பண்ணுவாங்க. நம்மள்ள என்ன பிழை இருக்கெண்டு தேடித் தேடி கண்டு பிடிப்பாங்க” எனச் சல்மா கூற “உங்களுக்கு தைரியம் இருந்தா வேற ஒபீசிற்கு இடமாறிப் போங்க. அப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கும். பிரச்சினைக்கு தீர்வுகாணாத முதுகெலும்பில்லாத திணைக்களத் தலைவருக்கு கீழே வேலை செய்யறத விட மாறிப்போறது நல்லதுதானே?..” என்றாள் சபீக்கா மிஸ் ஒரு வாரத்தின் பின்னர் சல்மா தனது இடமாற்ற விண்ணப்பத்துடன் திணைக்களத் தலைவரின் முன் நின்றபோது “ஒழுங்கா வேலைசெய்யற நீங்க ஏன் போகப்போறீங்க. நீங்க இஞ்ச வந்து ரெண்டு வருஷம்தானே ஆகுது”
“அப்பிடி இல்ல சேர். நாங்க பொம்பளங்க. நாங்களும் ஏதோ ஒரு நோக்கத்திலதான் தொழிலுக்கு வாறம். அந்த சூழலில கௌரவமா நடாத்தாட்டி என்னதான் நேர்மையா தொழில் செஞ்சாலும் அர்த்தம் இல்ல சேர்”
“அதுவும் சரிதான். உங்க ஒருத்தருக்காகப் பேசப்போனா நான் என்ர தொழிலச் செய்ய முடியாது. உங்களுக்கு நடந்த சம்பவத்தில எனக்கும் கவலைதான். எண்டாலும் என்னால அவங்களத் திருத்த முடியாது.” என்று அவரும் தனது இயலாமையை ஏற்றுக்கொண்டார்.
“ஒரு நல்ல அலுவலரை இழந்துவிட்டோமே” என்ற ஆதங்கமும் அவரது உள்மனதிலே எழாமலில்லை.
அதன் பின்னர் நியாயமான காரணத்திற்காக சல்மா இடமாறிச் செல்வதை அவராலும் தடுக்கமுடியாது போயிற்று.
அதன்பிறகு சல்மாவை எங்கு கண்டாலும் எவரையும் நமிர்ந்து கூடப் பார்க்காத அவர் அவளுக்கு சலாம் கூறி நலம் விசாரிப்பார். அப்போதெல்லாம் அவருக்குள்ளிருக்கும் மன உறுத்தல், முகத்திலே நிழலாடுவதை சல்மாவினால் மட்டுமே உணர முடிந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s