நிஜங்கள் கனவுகள் ஆக.. கனவுகள் நிஜங்கள் ஆக.. by N. Thujokanth

அன்றைய தினம் சனிக்கிழமை.. எனினும் அலுவலக உத்தியோகத்தர்கள் எமது பிரதேசத்திலுள்ள பண்டைய கால இன்னும் அழியாத சில இடங்களை பார்வையிட்டு அதன் தகவல்களை சேகரிக்க செல்ல திட்டமிட்டிருந்தனர். அந்தப்பட்டியலில் நானும் இருந்தேன் விடுமுறை நாளென்பதால் சற்று சலிப்புடன் அதிகாலையிலேயே எழுந்து தயாரானேன். மோட்டார் சைக்கிளில் பயணத்தை ஆரம்பித்தேன். நான்தான் தாமதமாகி விட்டோனோ என்று நினைத்து வழக்கத்தைவிட சற்று வேகமாக வண்டியை முறுக்கினேன்.

ஊர் எல்லையில் மரநிழலில் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தனர்.. ஐயோ பிந்திவிட்டேன்.. தொலைந்தேன் என்று எண்ணியவாறு வண்டியை நிறுத்தினேன். நான் எதிர்பார்த்ததுக்கு மாறாக என்னை வரவேற்றனர் சக ஊழியர்கள். நானும் அரட்டை அடித்துகொண்டு நின்றேன். வரவேண்டிய முக்கிய நபரும் வந்தபின் எமது பயணம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது போகப்போக காட்டு வழி.. ஒற்றையடிப்பாதையை அன்றுதான் கண்டேன். பல இடங்களை சுற்றிப் பார்த்தது மட்டுமல்ல தகவல்களை குறித்துக்கொள்ளவும் தவறவில்லை.

இப்போது ஆள் நடமாட்டம் இல்லை எனினும் முன்னொரு காலத்தில் மக்கள் திரளாக வாழ்ந்த இடமெனவும் யுத்தத்தின் போது பலர் பரிதாபமாக இறந்துவிட்டதாகவும் தப்பினோர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகவும் தகவல் இருப்பதாக எமது சமூக சேவை உத்தியோகத்தர் விளக்கினார்.. யுத்தத்தின் கொடூரம் பற்றி பேசியவாறு குன்று ஒன்றின் மீது
ஏறிக்கொண்டிருந்தோம்.

உள்ளே குகை போன்ற அமைப்பொன்று இருந்தது பொதுவாக பெண்கள் பயந்த சுபாவம் என்று கூறுவார்களே அதனை உறுதிப்படுத்துவதுபோல் பயணத்தில் இணைந்திருந்த இரு சகோதரிகள் உள்ளே வராமல் வெளியே போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். சரி எனக்கென்ன என்று உள்ளே சென்று விட்டேன்.. வெளியிலிருந்து யாரோ என்னை அழைக்கும் குரல் கேட்டது. ஆனால் அது பழக்கப்ட்ட குரலல்ல.. அவசர அவசரமாக வெளியே வந்து பார்த்தேன். ஒருவரையும் காணவில்லை. வெளியே நின்றிருந்த சகோதரிகளும் வெகுதூரத்தில் நிறுத்தி வைக்கப்ட்டிருந்த எமது வாகனத்திற்கருகே பேசிக்கொண்டிருந்தார்கள். யாராக இருக்கும் என்று எண்ணியவாறு மீண்டும் உள்ளே சென்று வந்தவேலையை கவனித்துக்கொண்டிருந்தேன்.

பொழுது கடந்தது.. மதிய உணவு தயார் செய்யப்பட்ட வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். யாரோ என்னை பின்தொடர்வது போலவே ஏதோ ஓர் உணர்வு என்னுள் இருந்தது. மாலை ஐந்து மணியை எட்டியது. பயணத்தில் இலக்கினை எட்டிவிட இன்னும் ஒரேயொரு இடம் மீதமாயிருந்தது. புராதன மன்னர்கள் வாழ்ந்த ஒரு அடர்ந்த காடு போன்ற ஒரு பிரதேசம். இரண்டடி வைப்பதற்குள் எனது செருப்பு கழன்றுவிட்டது.. செருப்பு புதியதுதான் ஆனால் காடு மலைக்கு பழக்கப்படவில்லையே.. சரி ஒன்றும் செய்ய முடியாது போனவர்கள் திரும்பிவரும் வரை எல்லையிலே காத்திருந்தேன்.

தனியாகத்தான் நின்றிருந்தேன் ஆனால் அவ்வாறு தோன்றவில்லை யாரோ என்னுடன் பேசுவது போன்று உணர்ந்தேன். போனை தட்டி சில போட்டோஸ் எடுத்தேன். காட்டுப்பகுதியாயிற்றே பல்லின பறவைகளும் கூடு சேரும் நேரமாகையால் தனது சொந்தங்களை அழைப்பதுபோல் தொனியிட்டுக்கொண்டிருந்தன. போட்டோவில் தொனியை பதிக்க முடியாதென்பதால் வீடியோவை ஒன் செய்து ரெக்கோட் செய்து முடிக்கும் நேரம் சென்றவர்களும் வந்துவிட்டார்கள். நன்றாக இருட்டிவிட்டது ‘வீட்ட போறதுக்கு 80 கிலோ மீட்டர் திரும்பி போகணுமே’ என்று என்னுள்ளே சலித்துகொண்டு வண்டியை எடுத்துக்கொண்டு பறந்தேன்.

உடல் களைப்பில் சலித்துக்கொண்டாலும் தூக்கம் வரவில்லை யாரோ என் அறையில் இருப்பதாக உணர்ந்தேன். நாளைந்து நாட்கள் தூக்கமில்லாமல் கழிந்துவிட்டதை அம்மாவிடம் சொன்னதும் “இண்டைக்கு வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போயிட்டு வாங்க மகன் நல்லா நித்திரை வரும்”; என்று கூறினார். அதுக்கென்ன சென்றுவிட்டு வந்து தூங்கினேன்.. ஆஹா அற்புதமான தூக்கம் அத்துடன் கனவும் வந்தது. நான் சென்ற பயணத்தின் இறதியில் தனியாக நின்ற இடத்தில் நிற்கையிலே ஒரு பெண் குரல் மீண்டும் என்னை அழைத்தது.

திரும்பி பார்கையில் பன்னிரண்டு வயதிருக்கும் நீண்ட கூந்தல் சற்று மங்கிய நிறம் கவர்ந்திழுக்கும் கண்கள் முகத்தில் சோகத்தை மறைப்பது போல இலேசான புன்னகை ஆனால் கொஞ்சம் வளைந்த மூக்குடன் என்முன்னே நின்றவளை கண்டு இக்காட்டில் இருள் படரும் நேரத்தில் யாரிது என்று என்னுள்ளே கேட்டவாறு அசந்து நின்றவேளை “யாரை பார்க்க வந்தீங்க” என்று கேட்டாள் “சும்மா இடங்களைப் பார்க்க வந்தனாங்க இனி போகப்போறம்” என்று கூறவே “நான் சொல்லுறத கேப்பீங்களா..” என்றவள் நான் அனுமதிக்கு முன்னரே ஆரம்பித்தாள். “என்ட தம்பிட பெயர் சது.. அஞ்சு வயசு இப்ப வாழைச்சேனையில விபுலானந்தர் ஆச்சிரமத்தில இருக்கிறான். அவனுக்கு ஐசிங் கேக் சாப்பிட சரியான விருப்பம் ஆனா அதெல்லாம் இங்க வாங்கிற கஸ்டம் என்றதால கிறீம் பிஸ்கட் வாக்கித்தாறன் என்டு சொல்லிட்டு கடைக்கு போககுள்ள திடீரெண்டு எல்லாப்பக்கமும் வெடி சத்தம் கேட்டது. நிறைய பேர் காயப்பட்டு விழுந்தாங்க. என்ட கழுத்திலயும் செல் துண்டு பட்டு இவடத்த விழுந்திட்டன். பிறகு தம்பி அடிக்கடி நான் பார்க்கிறனான் ஆனா அவனுக்கு என்னை பார்க்கேலாது. இங்க இருந்து ஆக்கள் எல்லாம் தப்பியோடக்குள்ள சதுவ மாமா கூட்டிப்போய் அங்க விட்டுட்டார். இப்ப ஆறு வருசமாகிட்டு இன்னும் கேக் வாங்கிகுடுக்கேலாம பெயிட்டு அவனுக்கு ஒருதுண்டு கேக் வாங்கி குடுப்பிங்களா..” என்று விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.
பார்க்க பரிதாபமாக இருந்தது. கண்டிப்பாக இதனை செய்தாக வேண்டும் என்று யோசிக்கும் போதே என் கண்ணிலும் ஏதோ கசிவதுபோல் உணர்ந்து விரல்களால் தடவியவாறு விழித்தேன். வீட்டில தானே இருக்கிறேன் இப்ப யாரோடு பேசினேன் என்று எண்ணியவாறு மீண்டும் தூங்கி விட்டேன் ஆனால் கனவை மறக்கவில்லை. மறுநாள் அடுத்த சனிக்கிழமை வந்தது. நேரத்துடன் குளித்து தயாராகி விட்டு மோட்டார் சைக்கிளில் பறந்தேன். நேராக விபுலானந்தர் ஆச்சிரமத்தில் நின்றது என் வண்டி.

திடீரென்று எப்படி சதுவை கேட்பது பிழையாக நினைப்பார்களே என்று யோசித்தபடி பொறுப்பதிகாரியிடம் “நான் கவிதரன், சிறுவர் கண்காணிப்பு பிரிவுல வேலை செய்யிறன். இங்க இருக்கிற பிள்ளைகளோட இன்றைய நாள ஸ்பெண்ட் பண்ண விரும்புறன். அனுமதி கிடைக்குமா” என்று கேட்டேன். அவரும் தலையை குனிந்தபடி யோசித்துவிட்டு “சரி முழு நாழும் இருக்கேலாது மதியம் வரைக்கும் இருக்கலாம்” என்று கூறியதும் “எனக்கு அது போதும்” என்று என்னை மறந்து சொல்லிவிட்டு பிள்ளைகள் இருக்கும் இடத்திற்கு சென்றேன். எங்கே தேடுவேன் சதுவை எங்கே தேடுவேன் என்று முணுமுணுத்தவாறு சென்றேன்.

பிள்ளைகளை கண்டதும் “எல்லாரும் வாங்க விளையாடுவம்” என்று அழைத்து வாங்கிச்சென்ற பிஸ்கட் பக்கற்களை எல்லோருக்கும் கொடுத்தேன். பிஞ்சுக்குழந்தைகளின் முகத்தில் தவழ்ந்த மகிழ்ச்சியை கண்டு என் கண்ணிலும் கண்ணீர் கசிய தவறவில்லை. எல்லாம் சரிதான் வந்த வேலைதான் இன்னும் முடியவில்லையே.. சது எங்கே..? விளையாட்டு விளையாட்டாக எல்லோரிடமும் பெயரைக்கேட்டுவிட்டேன் சது மட்டும் இல்லை. ‘ஹ{ம்.. கனவுல கண்டத நம்பினது என்ட தப்புத்தான்.. பரவாயில்ல பிள்ளைகளோட பொழுது கழிந்ததும் நல்ல அனுபவம்தான்’ என்று யோசித்து செல்ல தயாரானேன்.

அப்போது என் பின்னே ஒரு குரல் “மாமா எல்லாருக்கும் பிஸ்கட் குடுத்தீங்களாம் எனக்கு தரல்லயே..” திரும்பும் ஒரு கணப்பொழுதில் சது வந்துட்டானா என்று யோசித்தபடி வேகமாக திரும்பினேன். மெல்லிய சிவந்த உயரமான தோற்றத்துடன் ஒரு பெடியன் ஓடிவந்து இழைத்தபடி நின்றான் மூக்கு கொஞ்சம் வளைந்துதான் இருந்தது ஆனால் சதுக்கு ஐந்து வயதுதானே இது அவனில்லை என தீர்மானித்துக்கொண்டு “இவ்வளோ நேரம் எங்க போயிருந்த?” என்று கேட்டேன் “இண்டைக்கு புரட்டாதி சனிக்கிழமைதானே நாங்க ஊர்ல இருக்கும்போது அக்கா எனக்காக இந்த விரதம் பிடிக்கிறவள் இப்ப நான் அக்காவுக்காக விரதம் பிடிக்கிறன் அதுதான் கோவிலுக்கு போயிட்டு வந்தனான்.

“அக்கா எங்க இப்ப?” என்று கேட்டேன். “அக்கா எனக்கு கிறீம் பிஸ்கட் வாங்க போனவ வரயுமில்ல.. மாமா சொன்னார் அக்கா மட்டக்களப்புக்கு போயிருக்கிறாவாம் என்னை பார்க்க வருவாவாம் அது வரைக்கும் இங்க இருக்கட்டாம்.. ஆறு வருஷமாகிட்டு இன்னும் வரல்ல” என்று தழுதழுத்த குரலில் சொன்னான். என் தலையிலே இடியை வைத்து உலக்கையால் அடித்ததுபோல் இருந்தது. கண்ணீரை இதுவரை கண்டிராத என் கன்னங்கள் சிவக்கும்படி கண்ணீர் ஓடியது. இப்போதுதான் உணர்ந்தேன் சதுவுக்கு வயது ஐந்து இல்லை பதினொன்று ஆகிவிட்டது. கொண்டு சென்ற ஐசிங் கேக் வீணாகவில்லை அவன் கைகளில் கொடுத்ததும் அவனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவனுடன் அதிக நேரம் பேசினேன் அவன் தனிமையை விலக்கியதில் ஒரு ஆனந்தம் என்னுள்ளே. நான் செல்ல ஆயத்தமான நேரம் நான் மீண்டும் அவனை பார்க்க வருவேன் என்ற நம்பிக்கை அவன் பார்வையிலே விளங்கியது. நானும் அதே தீர்மானத்துடன் மோட்டார் சைக்கிளை வீட்டை நோக்கி செலுத்தினேன்.

விபுலானந்தர் ஆச்சிரமும் சதுவும் என் வாழ்வின் அங்கமாகி விட்டார்கள். சில மாதங்களுக்கு பிறகு எனது அலுவலக சுற்றுலா போட்டோக்களை கணனியில் போட்டு தட்டிப்பார்க்கும்போது கடைசியாக எடுத்த வீடியோவை ஒன் பண்ணி பார்த்தேன்.. நான் எதிர்பார்த்தது பட்சிகளின் இன்னோசை ஆனால் அதில் ஒலித்ததோ ஒரு பெண்ணின் அவலக்குரல் எப்படியிந்த மாற்றம் நிகழ்ந்தது அது இன்றுவரை புதிர்தான் எனினும் என்னால் ஊகிக்கவும் முடிந்தது. இனி அவள் அழதேவையில்லை நான் அவளின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்று ஆறுதலைடைந்தேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s