மூன்றாம் வீதி by Vasanthaseelan

“ஆ!”

தாயின் கிள்ளலில் வலியடன் விழித்தான் வினோத். கோபமாக முறைத்துக் கொண்டிருந்த தாயின் முகத்தைப் பார்த்து அலங்க மலங்க முழித்தான்.

“சனியனே பத்துக் கழுதை வயசாகுது இன்னமும் பாயிலயே மூத்திரம் பேஞ்சி கொண்டு…. எழும்படா!”

அவன் அப்போதுதான் தெப்பலாக நனைந்திருந்த சாரத்தின் ஈரத்தை உணர்ந்தான். மெதுவாக சிணுங்கியபடி எழுந்தான். சாரம் இல்லாததால் ஒரு காற்சட்டையை அணிந்தான். திரும்ப வந்து படுக்கையில் விழப்போனான்.

“டேய்… என்ன படுகிறாய் நாலரையாய் போச்சுது இப்ப படுத்திட்டு அஞ்சு மணிக்கு எழும்பப் போறியா? இப்பவே போய்ப் படி!”

மறுபடியும் சிணுங்கியபடி மேசைக்கு போனான். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் புத்தகத்தை எடுத்து முன்னால் வைத்துக் கொண்டான். மேசை விளக்கின் சுவிட்சைப் போட்டான் அதன் பளீர் வெளிச்சம் புத்தகத்தின் மீது விழுந்தது. சற்று நேரத்திலேயே அதன் மீது அவன் தலை விழுந்தது. வீணீர் புத்தகத்தை நனைத்தது.

ழூ ழூ ழூ
“எங்கயடி இந்த சீப்பை வைச்ச நீ?”

கண்ணாடி முன் நின்று விஜயன் கத்தினான்.

“கண்ணாடி தட்டிலதானே இருந்தது! வடிவாய் பாருங்க!”
சமையலறையிலிருந்து பதிலுக்கு கத்தினாள் யாழினி.

“வடிவா பாத்திட்டன். இங்க இல்ல!” என்றான் அழுத்தமாக.
“நான் இங்க சமைக்கிறதா? இல்ல, உங்கட சிப்பை தேடிக் கொண்டிருக்கிறதா?
வினோத்துக்கு ஸ்கூல் வேனும் வரப்போவது! உங்களோட பெரிய கரைச்சல்!”
வினோத் உள்ளை அவசரமாக சீருடை அணிந்து கொண்டிருந்தான். அவனது தங்கை மேசையில் மீது ஏறி அவனது புத்தகங்களை எடுக்க முயற்சித்தக் கோண்டிருந்தாள். யாழினி அவசரமாக முன்னறைக்கு வந்து கண்ணாடித் தட்டில் பேப்பருக்கு கீழை மறைந்திருந்த சீப்பை எடுத்து கணவனிடம் கொடுத்தாள்.

“கொஞ்சம் பேபப்பரை தூக்கிப் பார்த்தான். கோபி நின்றான். இவனும் கோபியும் நண்பர்கள் மட்டும்மல்லாமல் தொழிலிலும் பங்காளர்கள். விஜயன் ஒரு போட்டோகிராபர். இன்று ஒன்பது மனிக்கு ஒரு கல்யான வீட்டிற்கு செல்ல வேண்டும்.

“கொஞ்சம் பொறடா. உள்ளை வந்து இரு! இந்தா…. வெளிக்கிட்டிருவன்.”
கோபி உள்ளை வந்து அமர்ந்தான்.
“என்னடா, உன்ர மகன் நேற்று சைக்கிள் ஓட்டிகொண்டு போறதப் பார்த்தேன்!”
“சைக்கிளா? டேப், வினோத்! உனக்கு எத்தனை தடவடா சொல்றது சைக்கிள் பழகிறன் எண்டு சொல்லிக் கொண்டு ராணியக்காட சைக்கிள் எடுத்துக் கொண்டு ஓடாதடா எண்டு!
அவருக்கு இப்ப சைக்கிள் ஓட்டம் தான் தேவைப்படுது. இந்த முறை ஸ்கொலசிப் எழுதப் போறன் என்ட நினைப்பிருக்கா?”

அப்பாவின் திட்டலை வாங்கியபடி தலை நிமிராமல் சப்பாத்தை அணிந்து கொண்டிருந்தான் வினோத்.

“அட, நீ என்னடா அக்கறையே இல்லாம இருக்கிறாப்? ஸ்கொலசிப்புபுக்கு அவனவன் மக்களை விழுந்து விழுந்து படிப்பிக்கிறான். என்ர மகள் போன வருசம் எடுத்து பாஸ் பண்ணினவள் தெரியும் தானே! நூற்று எண்பத்தி எட்டு! எத்தனை ரியூசன் அனுப்பியிருப்பன். வீட்டிக்கே வந்து ஒரு டீச்சர் படிப்பிச்சவ. ஆனா எனக்கேண்டால் இவனப் பார்த்தா சந்தேகமாக்கிடக்கு!”

என்று நக்கலாக வினோத்தைப் பார்த்த கோபி,
“வினோத், உனக்கு போன எச்சாமில தமிழில எவ்வளவடா?” என்றான்.
தயக்கமாய் நிமிர்ந்த வினோத்,“அறுபத்தி எட்டு” என்றான்.
“கணிதம்?”
“முப்பத்தி ஏழு!”
அதானே பார்த்தன்! ஆங்கிலம்?”
“இருப்பத்து மூன்று”
“பார்த்தியா மார்ச்சை, இதுக்குத்தான் சொன்னேன். இப்பிடியே விட்டிட்டாய் என்றால் பெயில் ஆகிட்டுததான் வந்து நிற்பான். உன்ர மானம் தான் போகும்!”

விஜயன் எரிச்சலும் வினோத்தை முரைத்துப் பார்த்தான். வினோத் தலை குளிந்து கொண்டான். திடீரென விஜயன் கத்தினான்.

“யார், என்ட கமாராப்பையை எடுத்தது…?”
“ஏனப்பா, ஏன்?”
இஞ்ச வந்து பார், கமரா லென்ஸ் உடைஞ்சு கிடக்கு! நாசமாப் போச்சி!”
ரதி மெதுவாக முன்னறைக்கு வந்தாள்.
“இவன் வினோத்துதான் நேற்றிரவு உங்கட கமராவ எடுத்து ஆராய்ஞ்சு கொண்டிருந்தவன்!”
வினோத்துக்கு நடுங்க ஆரம்பித்தது.
“ஓமப்பா, அண்ணாதான் உங்கட கமராவ எடுத்து போட்டோ பிடிக்கப் போறன் எண்டு சொன்னவன். நல்லா அடி போடுங்கப்பா!” என்றாள் தங்கை.
“டேய், ஏன்ர என்ர கமராவ எடுத்தனி? உனக்கு எத்தன தடவை சொல்லியிருக்கிறன்?
ஊமைக் கொட்டாள் மாதிரி இருந்து கொண்டு குழப்படி! வாடா இஞ்ச!”
“இரண்டு அடி போடடா, இல்லாட்டி இவன் திருந்தமாட்டான்.” இது கோபி.
விஜயன் சுவரில் மாட்டியிருந்த பிரம்பை எடுத்து அவனுக்கு வெளுக்க ஆரம்பித்தான்.
சற்று நேரத்தில் வாசலில் பாடசாலை வேன் சத்தம் கேட்டது.
“வேன் வந்திட்டுது, விடுங்கப்பா அவன!”
வினோத் அறைகுறையாய் அடி வாங்கிய கையோடு பையை எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினான் அதிலிருந்து விழுந்த சில சித்திரப் பேப்பர்களை கவனிக்காமல்…
“டேய், சாப்பாட்டை எடுக்காமல் போறாய்!”
அம்மாவின் குரல் எட்டுவதுக்குள் வேன் புறப்பட்டடு விட்டது. விழுந்த காகிதங்களில் ஒன்றில் இருந்து ஒரு சிறுவனின் முகம் அவர்களை பரிதாபமாக பார்த்தது.

ழூ ழூ ழூ
வேனுக்குள் ஏறிய வினோத் டிரைவருக்கு பின்னால் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டான். பாடசாலை தொடங்க நேரம் இருந்தது. ஆனால் இந்த வேன் பத்து இடங்களுக்கு சென்று இருபது பிள்ளைகளை ஏற்றித்தான் பாடசாலைக்கு செல்லும். கொஞ்சம் கொஞ்சமாக வேனில் ளெ;ளை சீருடைகளிள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.
வினோத் தன் கண்ணீரைத் துடைத்தான். அப்படியும் மீறி வந்த கண்ணீரின் ஊடாக நகரில் பரபரப்பான நகர்வை கலங்கலாக பார்க்க ஆரம்பித்தான்.
“டேய், உன்னை தாண்டா!”
தோளில் கை விழந்தும் திருக்கிட்டுத் திரும்பினான். ஓர் உயரமான பருமனான மாணவன் நின்றான். அவன் பத்தாம் ஆண்டு படிக்கிற கணேஸ்.
“எழுப்படா, நாங்க நிற்கிறம், நீ பெரிய துரைமாதிரி இருக்கிறாய் என்ன, எழும்படா!”
“ஏன்? இதுதான் வழமையா இருந்து வாற சீற்!”
“பெரிய இவன்,ரூல்ஸ் கதைக்கிறியா,? எழும்புடா!”
அவனை அடிப்பது போல நெருங்கி வந்தான் கணேஸ். வினோத் மெல்ல எழுந்தான். டிரைவர் இதனை கண்ணாடியில் பார்த்தவாறு வாய்க்குள் சிரிப்பதைக் கண்டான்.
அவமானம் துக்கமாக மாறி தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.

ழூ ழூ ழூ
வேன் பாடசாலை வாசலிலிருந்து சற்றுத் தள்ளி நின்றது. மாணவர்கள் அதிலிருந்து உதிர்ந்தார்கள். எல்லோரும் வீதிக்கு குறுக்காக தாறுமாறாக ஓடிக் கடக்க அவன் மட்டும் மஞ்சள் கோட்டுக்கு அருகில் வந்து காத்திருந்து கடந்தான். அந்தப் பக்கம் ஒரு கிழவி ஒரு பெரிய பேட்டியை காலடியில் வைத்துக்கொண்டு அவனுக்காகவே காத்திருப்பது போல நின்றாள்.

“தம்பி, மோன, இந்தப் பெட்டிய ஒருக்கா அந்தக் கடை மட்டும் கொண்டு வந்து தாடா! பாட்டிக்கு முதுகுப் பிடிக்கல குனியவே ஏலாமக் கிடக்கு.”
பாடசாலைக்கு ஏற்கனவே நேரமாகிவிடடது. ஒரு கணம் தயங்கினான். பெரியவர்களுக்கு உதவ வேண்டும் என்று ராகவன் சேர் சொன்னது ஞாபகம் வந்தது. தலையாட்டியபடி பெட்டியைத் தூக்கினான். கொஞ்சம் கனமாகத்தான் இருந்தது. மூச்சுப் பிடித்தபடி தூக்கிக் கொண்டு போனான். பெட்டியை இறக்கி வைத்ததும்

“மெத்தப் பெரிய உபகாரம்….”
என்று கிழவி சொல்ல ஆரம்பிப்பதற்குள்
“நேரம் போயிற்று, நான் வாறன்!” என்றபடி பாடசாலையை நோக்கி ஓடினான்.

ழூ ழூ ழூ

ஏற்கனவே காலைக் கூட்டம் ஆரம்பித்து அதிபர் பேசிக் கொண்டிருந்தார். பூட்டப்பட்ட கேற்றுக்கு வெளியே தாமதமாய் வந்ததற்கான சிறப்புப் பரிசிகனை வாங்குவதற்காக காத்திருந்த மாணவர்களுடன் இணைந்து கொண்டான். கூட்டம் முடிந்ததும் ராகவன் சேர் நீண்ட பிரம்புடன் சிரித்தபடி வந்தார். வரிசையாக விழ ஆரம்பித்தது. சொல்லப்பட்ட காரணங்கள் சாட்டுக்களாகவே எடுக்கப்பட்டன. இவனைப் பார்த்ததும்

“நீயுமா, ஏனடா பிந்தி வந்தனி?” என்று அதட்டினார்.
“அது வந்து…. வந்து”
என்று அவன் முடிப்பதற்குள் சடார், சடார் என்று விழுந்தன. தடவியபடி வகுப்பிற்கு ஓடினான்.

ழூ ழூ ழூ
வகுப்பில் கடைசி வரிசையில் கடைசியாக அமர்ந்திருந்தால் வினோத். தமிழாசியர் இடாப்பு போட்டு முடிந்ததும்,
“பிள்ளைகளா, இந்த நாசமாப் போன நோட்ஸ் ஒப் லெசனை நான் எழுதி முடிக்க சேணும் நீங்க அதுவரைக்கும் சத்தம் போடாமல் வேற ஏதாவது படிக்க!” என்றார்.

மாணவர்கள் படிப்பதைத் தவிர மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள். சற்று நேரத்தில் பியோன் வந்து சேர். “நோட்ஸ் ஓப் லெசனை’ உடுத்துக் கொண்டு அதிபர் உங்கள ஓபீசுக்கு வரட்டாம்” என்று சொல்லிவிட்டு போனான். “ம்….. சரியாப் போச்சு, நான் போயிற்று வாறன். மொனிற்றர், கதைக்கிறவங்களின்ர பேரெல்லாம் எழுதி வை!” என்று வெளியேறிப் போனார்.

மொனிடற்றர் சோக்குடன் கரும்பலகைக்கு அருகில் போனதும் வகுப்பு கப்சிப்பானது. வினோத் எதனையோ வாய்க்குள் சொல்லிச் சொல்லி பாடமாக்க ஆரம்பித்தான. கதைத்தவர்கள் ஓரிரு பெயர்கள் எழுதப்பட்டன. பக்கத்தில் இருந்த குழப்படிக்கு பெயர்போன முகுந்தன் தன் பெயர் எழுதப்பட்டதும் சத்தமாகச் சிரித்தனர்.

“இனி நான் கதைக்கலாம்!”

வினோத் எதையும் கவனிக்காமல் மனனம் செய்யும் காரியத்திலேயே கண்ணாய் இருந்தான்.

“ஏ…! அசோக மன்னா! நீ இந்தப் போரின் மூலம் எதனை வென்று விட்டாய்? மாபெரும் நாட்டையா? மங்காத புகழினையா? ஆழியாத செல்வத்தினையா? இல்லை. இல்லவை இல்லை! நீ வென்றது பிணங்களை! வெரும் பிணங்களை! வெரும் பிணங்களை… ஆம்! வெரும் பிணங்களையே வென்றாய்! உன் போர் வெறியினால் நாடு பிடிக்கும் ஆசையினால் அயல் நாடுகளில் வாழ்ந்த மக்கள் மட்டுமல்ல, உன் நாட்டு மக்களும்தான் பேரழிவை சந்தித்துள்ளனர். எத்தனை அன்னையர் தம் அருமை மக்களை இழந்தனர்! எத்தனை விதவைகள்! எத்தனை அனாதைகள்! இவை எல்லாம் உன் தனி ஒருவனின் புகழ் பெரும் சுயநல வெறியினால்! இரு தேவையா என சிந்தித்துப் பார், நன்றாக சிந்திக்குப் பார்! மனிதர்கள் சந்தோஷமாக வாழ எது தேவை என்று சிந்தித்துப் பார்!”

“டேய், வினோத்… என்னடா முணுமுணுக்கிறாய்” என்றான் முகுந்தன்.

பதில் சொல்லாமல் இருந்த வினோத்தைக் கிள்ளினான். வினோத் வலியில் கத்த அடுத்ததாக அவனது பெயரும் எழுதப்பட்டது. முகுந்தன் மறுபடியும் சத்தமாக சிரித்தான். ஆசிரியர் திரும்ப வந்ததும் வினோத் உட்பட பெயர் எழுதப்பட்ட அனைவரும் சுளிர் சுளிர் என வாங்கிய பின் வெலியில் முழந்தாளில் இருத்தப்பட்டனர்.

ழூ ழூ ழூ
நல்ல வேளையாக நாதா சேர் அவனை உடனடியாக வரச் சொல்லியிருந்தனர். முழந்தாள் வலியிலிருந்து தற்காலிகமாக கிடைத்த விடுதலையுடன் ஆசிரியர்களின் அறைக்கு ஓடினான். இடையிலேயே வேகமாக வந்த ராதா சேர் அவனை நிறுத்தி, “என்ன எல்லாம் பாடமாக்கிவிட்டாயா?” என்றார்.

அவன் வேகமாக தலையாட்டினான்.
“சரி, வா சூப்பர நடிக்க வேணும், சரியா?”
அவரது வேக நடைக்கு அவனால் ஓடித்தான் சமாளிக்க முடிந்தது. ஒன்று கூடல் மண்டபத்திற்குள் நுழைந்தார்கள். மேடையில் ஓர் ஆசிரியர் சில மாணவர்களுகக்கு நாடகம் பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். ஒரு மாணவன் நின்று திக்கத் திக்கி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

“ஏ…! அசோக மன்னா…!”
வினோத் திடுக்கிட்டான்.
“வினோத், இது உன் வசனமல்லவா? அவன் ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறான்? இரு, வாறன்!” என்றபடி ராதா சேர் மேடையை நோக்கி போனார்.

வினோத் காத்திருப்பான். சேர் போய் அந்த ஆசிரியருடன் கடுமையாக விவாதிப்பது தெரிந்தது. அவர் ஒரு முறை வினோத்தை திரும்பி பார்த்து விட்டு ராதா சேரின் தோளில் தட்டி ஏதோ சொல்லி அனுப்பினார். திரும்பி வந்த சேரின் முகத்தைப் பார்த்த உடனேயே அந்த புத்த பிக்கு கதாபாத்திரம் அசோகன் நாடகத்தில் தனக்கு கிடைக்கப்போவதில்லை என்று வினோத்திற்கு புரிந்து விட்டது.

“வினோத், என்னடாப்பா செய்யிறது? அந்தப் பொடியன் யாரோ டெக்டரின் மகனாம். அந்த டொக்டரே வந்து இந்த நாடகத்தில் தன் மகன் நடிக்கவேணும் எண்டு அதிபரிட்ட கதைச்சவராம். நீ கவலப்படாத, உனக்கு வேற நாடகத்தில வாய்ப்புத் தாறன், என்ன?”

வினோத் ஒன்றும் சொல்லாமல் நடந்தான். ஏமாற்றத்தை விழங்க நினைத்தான்.
முடியவில்லை. கலங்கிய கண்ணை சேர் பார்த்து விடாமல் இருக்க
“நான் வகுப்புக்கு போறன் சேர்” என்று ஓடினான்.

வகுப்பில் வரலாறு டீச்சர் வந்திருந்தார். “எங்கடா போனனீ?” என்றார். “ராதா சேர் கூப்பிட்டவர், நாடகத்துக்கு!” மொனிற்றர் முந்திக் கொண்டான்.
“நாடத்திற்கா, அவருக்கு வேற வேலயில்ல! அவர் கூப்பிட்டா… இப்ப என்ன பாடம்?
வரலாறு! என்ர பாடத்துக்கு பெல்லடிச்சா நீ வகுப்பில இருக்க வேணுமா இல்லையா?”
பெருமூச்சுடன் தலையாட்டினான். நடக்கப் போவது புரிந்து விட்டது.
“வா… உங்களுக்கு என்ர பாடம் எண்டால் இளக்கமாப் போச்சுது!”
வெளுவைகள் விழுந்தன.

ழூ ழூ ழூ
பாடசாலை முடித்த பெல்லடித்ததும் மாணவர்கள் ஜெயிலிலிருந்து தப்பும் கைதிகள் போல விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். வினோத் பொய் தனது வேனில் அமர்ந்து கொண்டான்.

“டேய், உனக்கென்ன கொழுப்பா? இந்த சீற்ல நீ இருக்கக் கூடாது நான்தான் இருப்பன் எண்டு காலம உனக்கு சொன்னதை மறந்திட்டியா?”
முகுந்தன் உறுமியபடி நின்றான்.
“எழும்புடா….!”
அவனுடன் இருந்த மற்ற மாணவர்கள் சிரித்தார்கள். வினோத் மெல்ல எழும்பி நின்றான். கணேஸ் வெற்றிப் பெருமிதத்துடன் போய் அமர்ந்து கொண்டான். சற்று நேரத்தின் பின் எதையோ தேடியவன்,
“டேய், உன்ர பேனையைத் தா!” என்றான் வினோத்திடம் கையை நீட்டியபடி
வினோத் ஒன்றும் சொல்லாமல் நிற்க,
“டேய் உனக்கென்ன காது செவ்டா? பேனையைத் தாடா!” என்று அதட்டினான்.
“தாறன்!”
வினோத் தன் பையிலிருந்த பேனையை எடுத்து அதன் மூடியைத் கழற்றினான். பின் நீட்டிக் கொண்டிருந்த கணேஸின் உள்ளங்கையில் அப்பைனையின் கூரான பகுதியால் ஓங்கிக் குத்தினான்.
பேனை கூர் வழியாக சிவப்பாக ரத்தம் கொப்பளித்தது.
கணேஸ் வலி தாங்காமல் கத்தினான்.
“ஆ!”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s